Thursday, December 23, 2010

கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு - TPV8

இது திருப்பாவையின் எட்டாவது பாசுரம்

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


பொருளுரை:
கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் (பால் கறக்கப்படுவதற்கு முன்னர்) பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா ? பாவை நோன்பு ஒன்றையே தலையாய கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம்!

குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் எனும்) மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி, (அவனை அடைந்து) நாம் வணங்கினால், நம்மைக் கண்ட மாத்திரத்தில் 'ஐயோ' என்று மனமிரங்கி, கருணையோடு நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வாராய்!பாசுரச் சிறப்பு:

அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் (ஆச்சார்யனின் துணையோடு!) பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!

இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபிகை ஒரு சிறந்த பாகவதை, கண்ணனுக்குப் ப்ரியமானவளும் கூட. அதனால் தான் ஆண்டாள் "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து, "மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி, அந்த ஞானமிக்கவளை தங்களுடன் கூட்டிச் செல்ல இவ்வளவு பிரயத்தனப்படுகிறாள்! பொழுது விடியும் வேளை வந்து விட்டதை 'எருமைகள் சிறுவீடு மேய' கிளம்பி விட்டதைச் சொல்லி அப்பெண்ணை எழச் சொல்கிறாள்.

சிறந்த அடியவருடன் கூட்டாகச் சென்று பரமனை வழிபடுதலாகிய உயரிய வைணவக் கோட்பாட்டைத் தான் கோதை நாச்சியாரின் இப்பாசுரமும் முன்னிறுத்துகிறது!

அது எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்ணுக்கு "சிறுவீடு மேய்வது" (பனித்துளி படர்ந்த புற்களை மேய்வது) போன்ற மாடு மேய்க்கும் ஆயர்களின் பிரயோகங்கள் எல்லாம் தெரிய வந்தது? அதற்கு, ஆண்டாள் தன்னை ஒரு கோபிகையாகவே வரிந்து கொண்டதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்!

”தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய்”.

"தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பரமனைப் பற்றினால், நம் குற்றம் குறைகளை கருணையுடன் ஆராய்ந்து நமக்கருளுவான்" என்ற தத்வத்தை இங்கு ஆண்டாள் உரைக்கிறாள். இந்த தத்வத்தைத் தான் கண்ணன் கீதையில் இப்படி அருளுகிறான்:

”மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய”
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ”” (கீதை:07:7)


அதாவது, “தனஞ்ஜயனே, என்னைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லை, நூலிலே மணிக்கோவைபோல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நூலான (சூத்திரத்தால்) என் மீது தான் கோக்கப் பட்டு இருக்கின்றன”

ஆவாவென்றாராய்ந்து - கண்ணன் "ஆஹா" என்று ஆச்சரியப்படுகிற மாதிரி ஆண்டாள் பாடியதிலும் விஷயமிருக்கிறது! "ஆஹா, உங்களுக்கு இப்போதாவது என்னை அடைய வழி தெரிந்ததே!" என்று கண்ணன் கோபியரை அரவணைத்துக் கொள்வானாம்! அதாவது, ஆவாவென்று (பெருங்கணையுடன்!) கண்ணன் ஆராய்வான் எனும்போது, நமக்கு அனுகூலமான முடிவு நிச்சயம் கிடைக்கும் என்று ஆண்டாள் குறிப்பில் உணர்த்துகிறாள்!

எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி...

நம்மாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:

கோதுகலமுடைய பாவாய் என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிப்பதாம். பரசார பட்டர் நம்மாழ்வர் ஒருவரே கிருஷ்ண குதூகலத்தின் ஒரே வடிவம் என்கிறார்! மேலும் நம்மாழ்வரே திருவாய்மொழியில் பல இடங்களில் தன்னை ஒரு பாவையாக பாவித்துக் கொண்டு பாடியிருப்பதை காரணமாகச் சொல்லலாம்.

அதோடு, "எழுந்திராய்" என்பது நம்மாழ்வாருக்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அவர் எல்லா திவ்யதேசங்களிலும் அமர்ந்த திருக்கோலத்தில் தான் எழுந்தருளியுள்ளார்! அமர்ந்திருப்பவரைத் தானே எழுந்து கொள்ளச் சொல்ல முடியும் :-)

"கீழ்வானம் வெள்ளென்று" சூரிய உதயத்தின் போது தானே இருக்கும். அது போல, கலியுகத்தின் தொடக்கத்தில் இந்த வாகுலபூஷண பாஸ்கரன் அவதரித்ததால், அடியார்களுக்கு ஞானத்தெளிவு பிறந்தது!

கீழ்வானம் என்பது லீலாவிபூதி, மேல்வானம் என்பது நித்யவிபூதி. நம்மாழ்வார் தனது திருவாய்மொழிப் பாசுரங்களில் லீலாவிபூதி நித்யவிபூதியாவதாக அருளியிருப்பதை (ஓராயிரத்துள் எப்பத்து உரைக்க வல்லார்க்கு வைகுண்டமாகும் தம்மூரெல்லாம், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வார் மன்னூடே) காண முடிகிறது.

எருமை சிறுவீடு மேய்வான் - வீடு மோட்சத்தைக் குறிக்கிறது. கீழ்வீடு கைவல்யத்தைக் குறிக்கிறது. நம்மாழ்வார் தான் இதை "குறுகமிக உணர்வத்தோடு நோக்கி" என்று முதலில் தனது பாசுரம் ஒன்றில் குறித்தார். எருமை என்பது தாமச (அகங்காரம்,மமகாரம்) குணங்களைக் குறிப்பதாம். குருகூர் பிரானின் திருஅவதாரத்திற்கு முன் இக்குணங்கள் மாந்தர் பலரிடம் மிகுந்து காணப்பட்டதால், அவர்கள் கைவல்ய நிலையையே அடைய முடிந்தது!

"மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி இந்த கோபிகையை துயிலெழுப்பிக் கூட்டிச் செல்வதாகப் பாடுவதன் வாயிலாக, ஆண்டாள் அக்கோபிகையின் சிறந்த பாகவதத் தன்மையை உணர்த்துகிறாள். ஆழ்வார்களில் தலையான நம்மாழ்வாரைத் தான் நாச்சியார் குறிப்பிடுவதாகக் கொள்வது இங்கு பொருத்தமானதே!

"போவான் போகின்றாரை" என்பது ஆச்சரியப்படுத்தும் ஒரு பிரயோகம்! "போவதற்காக போகின்றவரை" என்பதற்கு என்ன பொருள்? அதாவது (பரமனைக் காணப்) போவதாகிய செயலே போதுமானது! அதுவே இலக்கும் ஆகி விடுகிறது. உபாயம், உபேயம் என்று இரண்டும் ஒரு மாதிரி கலந்து விடுகிறது! இதையே நம்மாழ்வார் தனது திருவிருத்தத்தில் "போவான் வழிக்கொண்ட மேகங்களே" என்று அருளியிருக்கிறார்!

அது போல "கூவுவான் வந்து நின்றோம்" என்று கோதை பாடுவதும் நம்மாழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

"கூவிக்கொல்லும் காலமென்னும் குறுகாதோ" "என்னைக் கூவியருளாய் கண்ணனே" "கூவிக்கொல்லாய் வந்தந்தோ" என்று நம்மாழ்வார் தன் பாசுரங்களில் அருளியிருக்கிறார்.

"வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே!" என்று எம்பெருமானை தனக்கு தரிசனம் தர நம்மாழ்வார் அழைத்தது போல, "தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்" என்று ஆண்டாள் நம்மாழ்வாரை பரமனின் தரிசனத்திற்கு துணைக்கழைக்கிறாள்!
*********************************************

பாசுர உள்ளுரை:

1. இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.

2. கீழ்வானம் வெள்ளென்று - ஒரு விதத்தில், கீழ்வானம் என்பது (அடியவர் வசமிருக்கும்) பரம்பொருளை வேண்டும் ஆதாரத்தன்மையை குறிப்பில் தெரிவிக்கிறது. அந்த ஆதாரமானது, "வெள்ளென்று" தூய்மையானதாக இருந்தால் தானே, "மேல் வானமாகிய" எம்பெருமான் அதன் மேல் வந்து அமருவான் !! - அன்னங்காச்சாரியார் உரை

"கீழ்வானம் வெள்ளென்று" என்பதற்கு, மோட்ச சித்தியைத் தேடும், ஆனால் உபாயம் அறியாமல் அக இருளில் உழலும் சீடன் (பிரபன்னன்) ஒருவனுக்கு, ஆச்சார்ய சம்பந்தத்தினால், சத்வ குணம் தலையெடுப்பதையும் ஞான வெளிச்சம் கிடைப்பதையும் உள்ளுரையாக அபினவ தேசிகன் கூறுவார் !!

3. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.


'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!

4. மிக்குள்ள பிள்ளைகளும் - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.

5. உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.

6. பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்

7. மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனை - அடியவர்களின் புலன்களை தறிகெட்டு அலையச்செய்து, அவர்களை அழிவை நோக்கிச் செலுத்தும் அல்லாதவைகள் (அகங்காரம்,மமகாரம்..) அனைத்தும் அரக்கர்களாகவும், அவற்றை முறியடித்து அடியார்களை நெறிப்படுத்தும் ஆச்சார்ய ஞானம், அவ்வரக்கர்களை மாயத்த இறை சக்தியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

8. தேவாதி தேவன் - காஞ்சி வரதராஜப் பெருமானை குறிப்பில் உணர்த்துவதாக சில பெரியோர் கூறுவர், இன்னும் சிலர் தேவநாதப் பெருமானை (திருவகீந்திரபுரம்)

9. சென்று நாம் சேவித்தால் - ஆச்சார்ய திருவடியைப் பற்றுதல்


10. ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!

என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

உயிரோடை said...

வ‌ழ‌க்க‌ம் போல‌ பாசுர‌ சிற‌ப்பாக‌ கூற‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ள் அனைத்தும் அருமை

//மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது//

சோம்பேறித‌ன‌மா இருப்ப‌ங்க‌ளை எருமைமாடே என்று திட்டுவ‌தில்லையா. ஹாஹாஹா

//கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.//

கோதை இவ‌ள் மேல் பொறாமை இல்லை பாருங்க‌ள். அவ‌ளை வைத்து தான் க‌ண்ண‌னை காண‌லாம் என்று நினைக்கிறாள். கோதை என்னே நின் ப‌க்தி.

பாலா வாழ்த்துக‌ள் அருமை அருமை.

குமரன் (Kumaran) said...

பாசுரச் சிறப்பு பகுதியைப் படிப்பதற்கே உங்கள் பதிவிற்கு வந்து கொண்டிருக்கிறேன் பாலா. நன்றாக இருக்கிறது.

enRenRum-anbudan.BALA said...

"வாம்மா" மின்னல்,
நன்றி.
//
சோம்பேறித‌ன‌மா இருப்ப‌ங்க‌ளை எருமை மாடே என்று திட்டுவ‌தில்லையா.

ஹாஹாஹா
//
எருமை யமன் வாகனம். கிண்டல் செய்வது தகாது ;-)


குமரன்,
//
பாசுரச் சிறப்பு பகுதியைப் படிப்பதற்கே உங்கள் பதிவிற்கு வந்து கொண்டிருக்கிறேன்

பாலா. நன்றாக இருக்கிறது.
//
நன்றி. அடியேன் தன்யானானேன் :)

enRenRum-anbudan.BALA said...

I have re-published this paasuram after adding more information and pictures

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails